Wednesday, September 9, 2009

சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பு – மறு கட்டமைப்பு

சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பு – மறு கட்டமைப்பு

சங்க இலக்கியம் ‘திணையிலக்கியம்’ என அழைக்கப் பெறும் சிறப்பினையுடையது. இவ்விலக்கியத்துள்;, முல்லை முதலிய அகத் திணைப்பகுப்புகளை மறுகட்டமைப்பு செய்யவேணடியது அவசியமாக உள்ளது. மறுகட்டமைப்பிற்கான காரணங்களையும், மறுகட்டமைப்பிற்குரிய முறைகளையும் எடுத்தியம்பிய சங்க இலக்கியத்துள் முல்லை எனக்குறிக்கப்பெறும் பாடல்களை; மறு கட்டமைத்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மறுகட்டமைப்பு செய்யவேண்டிய அவசியம்•

  • தொல்காப்பியம் அகத்திணை ஏழு எனக்குறிக்கின்றது. சான்றோர்கள் சங்க இலக்கியத்துள் காணப்படும் கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களை அடையாளப்படுத்தியுள்ளனர். எனினும் அகத்திணைப்பகுப்பில் ஐந்திணைப் பெயர்களை மட்டுமே காணமுடிகின்றதே தவிர எழுதிணைக்குரிய பகுப்புகளைக் காணமுடியவில்லை.
  • திணை இலக்கியப் பாடுநெறியில் திணைமயங்காப்பாடல்களும் பாடப்பெறும் திணைமயக்கப் பாடல்களும் பாடப்பெறும். சங்க அக இலக்கியத்துள் திணைமயங்காப் பாடல்களும் திணைமயக்கப் பாடல்களும் காணப்படுவதைப் பல்வேறு ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. எனினும் சங்க அக இலக்கியத் திணைப்பகுப்பில் கொடுக்கப் பட்டிருக்கும் பெயர்கள் திணைமயக்கப் பாடல்களையும் திணைமயங்காப்பாடல்களையும் தனித்தனியே அடையாளப் படுத்துவதாக அமையவில்லை.•
  • அகத்திணைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய (பாடு;பொருள்) உரிப்பொருள் வரையறை செய்யப் பட்டுள்ளன. எனினும் சங்க இலக்கியத்துள் முல்;லை முதலியனவாகக் குறிக்கப்பெறும் திணைகளுள் அத்திணைக்குரிய பாடுபொருளின்றி வேறு திணைக்குரிய பாடுபொருளையும் காணமுடிகின்றது.
  • “குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களைப் பொறுத்தளவில் திணை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாமலேயே அவற்றின் மூலச் சுவடிகள் உள்ளன. இந்நூல்களைத் தற்காலத்தில் பதிப்பித்த பதிப்பாசிரியப் பெருமக்களே இந்நூல்களிலுள்ள பாடல்களுக்குத் திணை பற்றிய குறிப்புகளைக் கொடுத்துப் பதிப்பித்துள்ளனர்”1 என்பர் அ.பாண்டுரங்கன். பிற்காலத்தில் திணை குறித்துப் பதிப்பித்த ஆசிரியர்களும் தங்களுக்குள் வேறுபடுகின்றனர். “குறுந்தொகைக்குத் திணை வகுத்ததில் முன்னோடியான தி.சௌ.அரங்கனாரைப் பின்பற்றித் திணை வகுக்கும் மர்ரே எஸ்.இராசம் 9 இடங்களிலும் சாமி சிதம்பரனார் 5 இடங்களிலும் திணை வேறுபடுகின்றனர். மர்ரே எஸ்.இராசம் அவர்களைப் பின்பற்றும் புலிய+ர்க்கேசிகன் ஓர் இடத்திலும், மு. சண்முகம் பிள்ளை 4 இடங்களிலும் வேறுபடுகின்றனர்”2 என்பர் ஆ.மணி. இவ்வாறு காணப்படும் பல வேறுபாடுகள் இலக்கிய ஆர்வத்திற்கும் ஆய்விற்கும் தடையாக அமைந்துவிடுதலும் உண்டு. •
  • குறுந்தொகைப் பாடல்களுக்குக் கூற்றுமுறையில் தலைப்பிட்ட உ.வே. சாமிநாதய்யர், “ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். திணைப்பெயரைத் தலைப்பிடுதல் அகநானூற்றினுள் கண்டதாயினும் பொருளில்; கருத்துச் செல்வதற்கு இம்முறை தக்கதென்று தோற்றியது”3 என்று குறிக்கின்றார். இதனுள் கருதத்தக்கது ‘தலைப்பிடுதல்’ எனும் சொல்லாகும். இதனால் சங்கப்பாடல்களுக்குத் திணைப்பெயரில் தலைப்பிட்டுள்ளார்களே தவிர திணைப்பகுப்புச் செய்திலர் என்பதை உ.வே சா வின் கருத்தாகக் கொள்ளமுடியும். இதற்கு, ஐங்குநூற்றில் பத்துக்களாகத் தலைப்பிட்டிருப்பதும் நெடும்பாடல்களுள் ‘குறிஞ்சிப் பாட்டு’ ‘முல்லைப் பாட்டு’ ‘நெடுநல்வாடை’ ‘பட்டினப்பாலை’ எனத்தலைப்பிட்டிருப்பதும் சான்றாக அமைகின்றன.
    மறுகட்டமைப்பிற்குரிய முறைகள்
  • அகத்திணைகள் ஏழு என்பதையும் அதற்குரிய பாடுபொருள் வரையறைகள் இவை யென்பதையும் தெளிவு செய்யது, சங்க அகப்பாடல்களின் பாடுபொருளை உரிப்பொருளின் அடிப்படையில் எந்தத்திணைக்குரியன என்பதைக் கண்டறிய வேண்டும்.
  • திணைக்கூறுகள் முதல,; கரு, உரி என மூவகையின. இவற்றுள் உரிப்பொருளுக்கே முதன்மை தர வேண்டும். ஒரு பாடல் முதல் கருப்பொருள் இன்றிப் பாடப்பெறலாம் ஆனால் உரிப்பொருளின்றிப் பாடப்பெறுவதில்லை. உரிப்பொருளைப் பாடுதலே புலவனின் நோக்கமாகும்.. முதலும் கருவும் உரிப்பொருளைச் சிறக்கச் செய்யும் துணைக்கூறுகளேயன்றி முதன்மைக் கூறுகளாக அமையாதன.
  • உரிப்பொருளின் அடிப்படையில் கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம,; நெய்தல் பெருந்திணை எனத் திணைகள் குறிக்கப் பெறவேண்டும்.
    • திணைமயங்காப் பாடல்கள் கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல,; பெருந்திணை என்றும் திணைமயக்கப் பாடல்கள் ‘முல்லையுள் குறிஞ்சி’, ‘முல்லையுள் பாலை’, ‘முல்லையுள் மருதம’;, ‘முல்லையுள் நெய்தல்’; எனும் முறையிலும் குறிக்கப் பெற வேண்டும். இம் முறையில் ‘முல்லையுள் பாலை’, என்றால் முல்லையின் பாடுபொருளுடன் பாலையின் முதல் கரு மயங்கிய திணை மயக்கம் என்பது பொருளாகும்.
  • ஓர் உரிப்பொருளுடன் பல திணைகளுக்குரிய முதல் கருப்பொருள்கள் காணப்படின் அப்பாடல்களுக்கு ‘முல்லையுள் குறிஞ்சியும் மருதமும் என்றும் ‘முல்லையுள் குறிஞ்சியும் பாலையும் மருதமும்’ என்ற முறையில் திணை குறித்தல் வேண்டும்.
  • கைக்கிளை, பெருந்திணைகளுக்குத் தனியே முதல் கருப்பொருள்கள் வரையறை செய்யப் பெறவில்லை எனவே இத்திணைகள் எந்தத்திணைக்குரிய முதல் கருவுடன் வரினும் அம்முதல் கருப்பொருட்கள் அத்திணைக்குரியனவாகக் கொள்ளப்படும்.

முல்லைத் திணைகள் மறுகட்டமைப்பு

சங்க இலக்கியத்துள் முல்லை எனும் திணைப் பெயரையுடைய பாடல்கள் 234 காணப்படுகின்றன. இவற்றுள் முல்லையின் உரிப்பொருளையுடையன 194 பாடலகள். பிறதிணையின் உரிப்பொருளையுடைய பாடல்கள் 40.
முல்லையின் பாடுபொருளையுடைய பாடல்கள் 194 இல் 136 பாடல்கள் முல்லை எனக் குறிக்கப்பெறுதற்குரியனவாக உள்ளன. இவற்றுள் பிறதிணையின் கூறுகள் எவையும் காணப்பெறவில்லை. எஞ்சிய 58 பாடல்கள் முல்லையின் உரிப்பொருளையுடையனவாக இருந்தபோதும் பிறதிணையின் முதல் கருவையும் உடையனவாக உள்ளன. அவை ‘முல்லையுள் குறிஞ்சி’ ‘முல்லையுள் பாலை’ ‘முல்லையுள் மருதம்’ ‘முல்லையுள் நெய்தல்’ எனக்குறிக்கப்பெறவேண்டியனவனவாக உள்ளன. பிறதிணையின் உரிப்பொருளையுடைய பாடல்கள் 40 இல் குறிஞ்சி பாலை மருதம் கைக்கிளைக்குரிய பாடல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஏழு பாடல்கள் பிறதிணைக்கே உரிய திணைமயங்காப்பாடல்களாக உள்ளன. அவை மருதம் பாலை கைக்கிளைக்குரியனவாக உள்ளன. எஞ்சிய 33 பாடல்கள் திணைமயக்கப் பாடல்களாகும் இவை ‘குறிஞ்சியுள் முல்லை’ ‘பாலையுள் முல்லை’ எனக்குறிக்கத்தக்கனவாக உள்ளன. இப்பாடல்களை கீழ்வருமாறு அமைகின்றன.
முல்லைப்பாடல்களில் ‘மருதம்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 : குறுந். 191, 370. முல்லைப்பாடல்களில் ‘பாலை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 :ஐங். 426,429. கைக்கிளை எனக் குறிக்கத்தக்க பாடல்கள் - 3 : கலித். 109, 112, 113. முல்லைப்பாடல்களில் ‘ குறிஞ்சியுள் முல்லை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 17 :குறுந். 233, 240, அகநா. 394, கலித். 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 110, 111, 114, 115, 116, 117.முல்லைப்பாடல்களில் ‘ பாலையுள் முல்லை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 16 :நற். 226, ஐங். 423, 424, 427, 428, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440.முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் குறிஞ்சி’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 33 :குறுந். 94, 108, 110, 190, 279, 319. நற். 89, 139, 161, 321, 371. அகநா. 4, 14, 24, 94, 114, 184, 264, 274, 284, 364. ஐங். 404, 416, 456, 460, 464, 469, 470, 479, 497, 498, 500. நெடுநல். முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் பாலை’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 11 :குறுந். 24, 66, 314, 391. நற். 97, 99, 374, 394. அகநா. 164 ஐங். 452, 484.
முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் மருதம்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 12 :குறுந். 234 அகநா. 44, 84, 194, 204, 294, 304, 374. ஐங். 44,8 459 நற். 115, 242.முல்லைப்பாடல்களில் ‘முல்லையுள் நெய்தல்’ எனக்குறிக்கத்;தக்க பாடல்கள் - 2 :குறுந். 387. முல்லைப்பாட்டு.



முடிவுரை•

இக்கட்டமைப்பால் முல்லை எனக்குறிக்கப்பெறும் 234 பாடல்களில் 136 பாடல்கள் மட்டுமே முல்லைக்குரிய திணைமயங்காப்பாடல் என்பதும், மருதம் (2) பாலை(2) கைக்கிளை(3) எனும் திணைகளுக்குரிய திணைமயங்காப்பாடல்களும் இதனுள் காணப்படுகின்றன என்பதும் பெறப்படுகின்றது. • முல்லை எனக்குறிக்கப் பெறுவனவற்றுள் 33 பாடல்களில் பிறதிணையின் உரிப்பொருளுடன் முல்லையின் முதலும் கருவும் மயங்கியுள்ளன. அப்பாடல்கள் முதல் கருப்பொருளால் முல்லை எனக்குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை ‘குறிஞ்சியுள் முல்லை’ என்றும் ‘பாலையுள் முல்லை’ என்றும் குறிக்க வேண்டும். • முல்லை எனக் குறிக்கப்பெறுவனவற்றுள் 58 பாடல்களில் முல்லையின் உரிப்பொருளுடன் பிறதிணையின் முதலும் கருவும் மயங்கியுள்ளன. அப்பாடல்கள் ‘முல்லை’ எனக்குறிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை, அவற்றுள் காணப்படும் திணைமயக்கங் கருதி ‘முல்லையுள் குறிஞ்சி’, ‘முல்லையுள் பாலை’, ‘முல்லையுள் மருதம’;, ‘முல்லையுன் நெய்தல’; எனக்குறிக்கவேண்டும். • இவற்றால் முல்லையின் உரிப்பொருளுடன் எந்தத்திணையின் முதல் கருப்பொருள்கள் மயங்கியுள்ளன என்பதை எளிதில் பிரித்தறிய முடியும்;.
சான்றெண் விளக்கம்1. அ.பாண்டுரங்கன், திணைக்கோட்பாடு(கட்.) துழரயெடள ழக வுயஅடை ளுவரனநைள – 2002-1 ப. 22. இரா. சந்திரசேகரன், (ப.ஆ)சங்க இலக்கியம் பன்முகப் பார்வை ப. 813. உ.வே.சாமிநாதய்யர்(உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும் முகவுரை ப. ஓஏஐஐஐ

Thursday, March 12, 2009

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக வழக்கில் சில சொற்களும், சொல்லடைவுகளும், பழமொழிகளும், இலக்கிய அடிகளும் தனக்குரிய பொருளை இழந்துள்ளன, சிந்தனை வளர்ச்சியாலும் கால மாற்றத்தாலும் வேறொரு பொருள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றின் உண்மைப் பொருள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராயும் பகுதியாக இப்பக்கங்கள் அமைகின்றன.
“மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே”
எனும் பழமொழியை பெரியோர் வாய்க் கேட்டதுண்டு. இதற்கு இன்றைய நிலையில் இருவேறு பொருள்கள் காணப்படுகின்றன.
1. இவ்வரியை, “மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே” என்று பிரித்துப் பொருள் கூறுகின்றனர். திரை என்றால் அலை, எனவே மங்கு திரை என்பது சீற்றம் இல்லாத அலை, என்றாகிறது. இதனால் ‘அலைகள் சீற்றம் இன்றியுள்ளதை நம்பி ஆற்றில் இறங்குதல் கூடாது. எதிர்பாராத விதமாக ஆற்று நீர் பெருக்கெடுத்து வருதல் உண்டு’ எனப் பொருள் கூறப்படுகிறது.
2. ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’ எனப் பிரித்து, ‘மண்ணால் செய்யப் பெற்ற குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, மண்குதிரை ஆற்றைக் கடந்து செல்லும் தகுதியற்றது’ என்று பொருள் கூறுவதையும் காண முடிகின்றது. கருத்துக்களின் பொருத்தம்
முதல் கருத்;தில், ‘மங்கு திரை’ என்று பிரிக்கப்படுகின்றது. ஆற்றில் இறங்காதே என்பது அப்படியே ஏற்கப்படுகின்றது. இங்கு சிந்திக்க வேண்டுவது ‘திரை’ என்பதே. அலைகள் எங்கு தோன்றும்? நிலையாக இருக்கும் நீர் நிலைகளில்தான் அலைகள் தோன்றும். ஓடிக்கொண்டிருக்கும் நீர் பள்ளத்தை நோக்கிப் பயணப்படுமே அன்றி அலைகளைத் தோற்றுவிப்பதில்லை. ஆற்று நீர் பெருக்கெடுத்த போதும் அதன் பயண வேகம் அதிகரிக்குமே அன்றி அலைகள் அதிகரிப்பதில்லை. எனவே ஆற்றில் இறங்காதே என்ற பிற்பகுதியை நோக்க மங்கு திரை என்ற பொருள் பொருந்தவில்லை என்பது தெழிவு
இரண்டாவது கருத்து, மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றமைகின்றது. இதனுள் குதிரை ஆற்றைக் கடக்க உதவும் விலங்கு என்ற பொருள் உள்நிற்கின்றது. உலக வழக்கில், ஆற்றைக் கடந்து போவதற்கு விலங்குகளில், கழுதை, மாட்டு வண்டி முதலியன பயன்படுத்தப்படுகிறதே தவிர குதிரை பயன்படுத்தப்படுவதில்லை. ஆற்றைக் கடக்கும் வலிமை குதிரைகளுக்கு மிகக் குறைவு. மண் கழுதையினை நம்பி ஆற்றில் இறங்காதே மண்மாடுகளை நம்பி ஆற்றில் இறங்காதே என்றிருந்தால் ஏற்கலாம். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றிருப்பதை ஏற்க இயலாது.
கருத்துக்கள் உணர்த்தும்
நீதி இருவேறுபட்ட கருத்துக்களும் மக்களுக்கு ஒரு நீதியை உணர்த்தி நிற்கின்றன. அதாவது நிலையற்ற ஒன்றை நம்பி பெரிய செயலில் ஈடுபடுதல் கூடாது. மங்கு திரை ௲ அலைகளின் அளவு நிலையற்றது. பெரியதாக வருதற்கு வாய்ப்புடையது. மண் குதிரை ௲ மண்ணால் ஆன குதிரை நிலையற்றது. ஆற்று நீரில் அழிந்து விடும் தன்மையுடையது. இவற்றை நோக்க இப்பழமொழி உணர்த்தும் நீதி “நிலையானது போல் தோன்றும், நிலையற்ற ஒன்றை நம்பி பெரிய செயலில் ஈடுபடுதல் கூடாது” என்பதாக அமைகின்றது. இந்நீதியின் அடிப்படையில் இதன் பொருளை உணர்தல் வேண்டும். மெய்ப்பொருள்
‘ஆற்றில் இறங்காதே’ என்ற பகுதியில் கருத்து வேறுபாடுகள் காணப்படவில்லை. எனவே அப்பகுதியினை ஏற்பது சிறப்பு. ஆற்றுடன் தொடர்பு படும் அளவில் முதல் பகுதியைச் சிந்திக்க வேண்டியுள்ளது. ‘நிலையற்ற ஒன்று நிலையானது போல்’ தோன்றும் தன்மையில் அமைந்த ஆற்றுப் பகுதியுடன் தொடர்புடைய பொருள்களே முதல் பகுதிக்குரியனவாக அமைய வேண்டும். ஆற்றைக் கடக்காதே என்றில்லாமல் ஆற்றில் இறங்காதே என்றிருப்பதும் கவனத்திற்குரியது. ஆற்றில் இறங்கும் மனிதன் ஆற்றில் பள்ளமில்லாது மேடாக உள்ள இடத்தைத் தேர்ந்தெடுப்பதுடன் பிறகு அம்மேடு உறுதியாக உள்ளதா என்பதைச் சோதிப்பான். இம்முயற்சியில் அவன் தோற்றுப் போவதும் உண்டு. ஆம்! சில மேடுகள் மேலே பார்ப்பதற்கு உறுதியாகக் காணப்பட்ட போதும் அதன் உட்புறம் உறுதியற்ற களிமண் தன்மையாக இருக்கும். அதை நம்பி இறங்குவோர் புதையுண்டு போவதற்கு வாய்;ப்புண்டு. இவ்வாறு அமையும் மேடுகளைக் குதிர் என்று கூறுவதுண்டு. ‘குதிர்’ என்பது குவிந்து காணப்படும் எந்தப் பொருளுக்கும் வழங்கப்படுகிறது. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைக் கேள்வியுறுவோம். அதன்படி ‘குதிரை அதாவது குவிந்து காணப்படும் மண்குவியலை நம்பி ஆற்றில் இறங்குதல் கூடாது’ என்பது பெறப்படுகிறது. இவற்றால் இப்பழமொழியானது “மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே” என்று அமைந்திருக்க வேண்டும் என்பது தெளிவு பெறுகின்றது.முற்காலத்தில் குதிர் + = குதிரை, என்று வழங்கப்பட்ட சொல்லைப் பிற்காலத்தில் குதிரை + ஐ = குதிரையை எனக் கொண்டுள்ளனர்.

Monday, February 16, 2009

தொல்காப்பியப் பார்வையில் 'எழுத்து'

தமிழ் மொழியில் எழுத்திற்கென தனித்ததொரு இலக்கணம் உள்ளது. எனினும், 'எழுத்து' என்பதற்கான பொருள் நன்கு உணரப்படாமலே இருக்கின்றது. எனவே, எழுத்து என்பதற்கான பொருளைத் தொல்காப்பியப் பார்வையில் விளக்குதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எழுத்திற்கான பொருள்கள்

எழுத்து என்பதை விளக்கும் பல்வேறு பகுதிகள் இரண்டு விதமாக அமைகின்றன. அவையாவன,
1. எழுதப்படுதலின் எழுத்தாயிற்று 2. எழுப்பப் படுதலின் எழுத்தாயிற்று என்பனவாகும்

இவற்றை, ' இவ்வெழுத்தென்னும் பெயர் முதன் முதல் மக்கள் மொழிகளைத் தோற்றி வருங்காலத்து அவர்கள் தம் கருத்தைப் பிறருக்குப் பேச்சு முறையால் உணர்த்தாமல் தரையிலும் ஓலை முதலியவற்றிலும் அவ்வொலிகளை எழுதிக் காட்டத் தொடங்கிய காலத்துப் பெற்ற காரணப் பெயராதல் வேண்டுமென்பது 'எழுதப்படுதலினெழுத்தே' என வரும் பழைய சூத்திரத் தொடராற் புனலாம்' என்றும் 'எழுத்தாவது கட்புலனாகா உருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையாம்'1 என்றும் விளக்கிக் கூறுவர்.

தொல்காப்பியப் பார்வை
'தொல்காப்பியம்' தமிழ் மொழியின் தனிப்பெரும் சிறப்பாகும். இந்நூலினை அடுத்து குறிப்பிடத்தகுந்த எழுத்திலக்கணநூல் 'நன்னூல்' ஆகும். இந்நூல்களுக்கு இடையே ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன. எனினும், எழுத்திலக்கணப் பகுதிகளை ஆராயும் உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் ஒன்றன் கருத்தை மற்றொன்றிடத்துள் புகுத்திக் காண்கின்றனர். இதனால் ஒரு நூலின் நுட்பமான பகுதிகள் வெளிக்கொணரப்படாமல் போகின்றன. எனவே தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கொண்டு எழுத்தென்பதற்கான பொருளை வரையறுப்பது அவசியமாகிறது.

எழுத்துக்களின் எண்ணிக்கை

தொல்காப்பியம் குறிப்பிடும் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆகும். இதனை,
'மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது
அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்'
( தொல்.எழுத்.103: 1 – 3)
என்னும் நூற்பா உணர்த்தும். இம் முப்பத்துமூன்று எழுத்தையும் தொல்காப்பியம் இரண்டாகப் பிரிக்கின்றது. அவை 1. அகரம் முதலா னகரம் இறுதியாகிய 30, 2. சார்ந்து வரல் மரபினையுடைய மூன்று ஆகும். ( தொல்.எழுத்.1,2)
இம் முப்பத்துமூன்று எழுத்துக்களுள் வரிவடிங்கள் மூப்பத்தோர் எழுத்திற்கே உள்ளன. குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற இரண்டிற்கென தனி வடிவங்கள் இல்லை. இவற்றால், வடிவம் உள்ளனவும் வடிவம் இல்லாதனவும் எழுத்தெனக் கூறப்பட்டுள்ளதால் எழுத்தெனக் கொள்வதற்கு வடிங்கள் முக்கியம் அல்ல என்பது விளங்கும்.





உயிர்மெய்யெழுத்துக்கள்
தொல்காப்பியம் உயிர்மெய் எழுத்திற்கான வடிவங்களை,
'புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவு உருவு ஆகி அகரமோடு உயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆஈர் இயல உயிர்த்தல் ஆறே' ( தொல்.எழுத்.17 )

என்று விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ் வடிவங்களைத் தொல்காப்பியம் எழுத்துக்களின் எண்ணிக்கையில் சேர்க்கவில்லை. தொல்காப்பியம் கூறும் முப்பத்து மூன்று எழுத்துக்களுள் இவை இடம்பெறவில்லை. உயிர்மெய் வடிவங்களைக் குறிப்பிட்ட தொல்காப்பியம் அவற்றை எழுத்துக்கள் எனச் சேர்க்கவில்லை. இதனால் வடிவங்களே எழுத்துக்களாகும் என்ற கருத்து பொருந்தாமல் போகின்றது.
அளபெடை
எழுத்துக்கள், தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து அளபெடுத்தல் அளபெடையாகும். ஓர் எழுத்து அளபெடுத்துள்ளதை உணரும் வகையில் அவ்வெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அதன் அருகில் குறிக்கப்பெறும். இதனை,
'குன்றுஇசை மொழிவயின் நின்றுஇசை நிறைக்கும்
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.' ( தொல்.எழுத். 41 )
என்று கூறுகின்றது தொல்காப்பியம். இதன் அடிப்படையில் அளபெடை, 'ஆடூஉ'
என்னும் முறையில் எழுதப்படுகிறது. இங்கு 'உ' ஓர் ஓசையின் அளவினைக் குறிக்கின்றதே தவிர தனியெழுத்தாக இடம்பெறவில்லை.




ஐகார ஒளகாரங்களின் அளபெடை குறிக்கப்படும் போது அதனுடன் இகர உகரங்களின் வடிவங்கள் குறிக்கப்பெறும் என்பதை,
'ஐ ஒள என்னும் ஆ ஈர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசை நிறைவு ஆகும்' ( தொல்.எழுத். 42)
என்று கூறுகின்றது தொல்காப்பியம். இங்கு 'இ' 'உ' என்னும் வடிவங்கள் 'ஐ' 'ஒள' என்னும் ஓசையில் ஒலிக்கின்றதேயன்றி இகர உகர ஓசைகளாக ஒலிக்கவில்லை. இவை போன்றே
'அகர இகரம் ஐகாரம் ஆகும்' ( தொல்.எழுத். 54)
'அகர உகரம் ஒளகாரம் ஆகும்' ( தொல்.எழுத். 55)
'அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்' ( தொல்.எழுத்.56)
என்னும் நூற்பாக்களும் நோக்கத்தக்கனவாகும்.
இவற்றால் எழுத்திற்குரிய முதன்மை ஒலியாக இருக்கின்றதே தவிர அதன் வடிவமாக இல்லை என்பது விளங்கும்.
எழுத்தென்பது ஒலிகளே
எழுத்துக்களின் முறை வைப்பை நோக்கும் போது எழுத்துக்களுக்கு ஓசைகளே முக்கியம் என்பதை அறிய முடிகின்றது.
எழுத்துக்களுள் அகர ஆகாரங்கள்; முதலாவதாக வைத்து எண்ணப்படுகின்றன. இதற்குக் காரணம் அகர ஆகாரங்கள் வாயைத் திறக்கும் அளவில்,; பிற முயற்சிகள் இன்றி ஒலிக்கும் இயல்பின. இவற்றைத் தொடர்ந்து அமையும் பிற எழுத்துக்கள் அங்காத்தலோடு பிற முயற்சிகளும் உடையனவாகும்.
உயிரை அடுத்து மெய்கள் கூறப்படுதற்கும் ஒலிப்பு முறைகளே காரணமாகும். அது மட்டுமின்றி மெய் எழுத்துக்கள் தனித்து கூறப்படும் போது அவற்றிற்கு உயிர் எழுத்துக்களின் உதவி தேவையாகின்றது. இதனை, 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' ( தொல்.எழுத்.46.) என்னும் நூற்பாவால் அறியலாம். இவற்றால் எழுத்துக்கள் ஒலிகளின் அடிப்படையில் நோக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டு தொகை செய்யப்பட்டுள்ளன என்பது உணரப்படும்.

முடிவுரை
எழுத்தென்பதற்;கான நேரிய பொருளைத் தொல்காப்பியத்தின் வழி ஆராய்தல் தேவையாகிறது. தொல்காப்பியம் கூறும் எழுத்துக்களின் எண்ணிக்கை, உயிர்மெய் எழுத்திற்கான வடிவங்கள், அளபெடை அமைப்பு எனும் இவற்றை நோக்க எழுத்திற்கு வடிவங்கள் முக்கியம் அல்ல என்பதும் இவற்றுடன் எழுத்துக்களின் முறைவைப்பை நோக்கும் போது எழுத்திற்கு ஒலிகளே முக்கியம் என்பதும் பெறப்படுகின்றது. இவற்றால் எழுத்து என்னும் சொல் எழுதுதல் எனும் பொருளில் அமையவில்லை என்பதும் ஒலிகள் எழுதல் எனும் பொருள் குறித்து அமைந்திருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகின்றது.

சான்றெண் விளக்கம்
1. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியம் நன்னூல் எழுத்து ப.17