Tuesday, October 26, 2010

“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே”

“சேஎய் குன்றம்;…. குலைக் காந்தட்டே” என்பது குறுந்தொகை முதற்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் துறைக் குறிப்புகள் துறையாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் இரண்டு விதமாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1. தோழி கையுறை மறுத்தது 2. தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்பனவாகும்.
ஒருபாடலுக்கு ஒரு துறைக் குறிப்பு மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு பாடல் ஒன்றிற்கு மேற்பட்ட துறைக்குறிப்புகளைப் பெறும் போது அப்பாடல் பன்முக நோக்கில் பொருள் தரும் சிறப்புடையதாகிறது. எனினும், இப்பாடலுக்கு கூறப்படும் வேறுபட்ட இரு துறைகளுள் பெரிதும் ஏற்புடையது எது? என்பதை ஆராய்தல்; இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குறுந்தொகை முதற்பாடல்
“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் ப+வின் குலைக் காந்தட்டே (குறுந். 1)
இப்பாடல் குறுந்தொகையில் முதற்பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பாடல் அகப்பாடலாகவும் பாடலின் துறைக்குறிப்புகளின்படி தோழி கூற்றுப் பாடலாகவும் கொள்ளப்படுகிறது.
தோழி கையுறை மறுத்தது
இப்பாடலைத் தோழி கையுறை மறுத்தது எனும் கூற்றில் விளக்கும் உ.வே. சாமிநாதய்யர், “போர்க்களம் இரத்தத்தால் செந்நிறத்தை உடைய களமாகும்படி, அசுரர்களைக் கொன்று இல்லை ஆக்கிய, இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும் சிவந்த கொம்பினை உடைய யானையையும் உழல இட்ட வீர வளையையும் உடைய முருகக் கடவுளுக்குரிய இம் மலையானது, சிவப்பாகிய ப+ங்கொத்துள்ள காந்தளை உடையது. (முடிவு) சேயினது குன்றம் காந்தட்டு (கருத்து) காந்தள் ப+வால் குறைவிலே மாதலின் நின் கையுறையை ஏலேமென்றபடி” என விளக்குவர்.
தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது
. எனும் துறையில் விளக்குவோர், “தலைமகனது வரவினை உணர்ந்து தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சென்று யான் செங்காந்தட் ப+க் கொய்து கொடு வருவல் அவ்விடம் தெய்வமுடைத்து நின்னால் வரப்படாது நீ அவ்வளவும் இப் பொழிலிடத்தே நில் என்று நிறீஇ நீங்குவதற்குச் செய்யுள் (இறை.18, நம்பி.149)”
என்று விளக்குவர்.

கூற்றெச்சமும் குறிப்பெச்சமும்
தோழி கையுறை மறுத்தது எனும் நோக்கையும் தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் நோக்கையும் ஏற்கும் பேராசிரியர், “இக் காந்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம் அக்கூற்றும் செய்யுட்குச் சிதைவின்மையின் அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி இடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம் அவனைக் கூடுக வெனத் தான் கூறாளாகலின்(தொல். செய்.206, ந. இ.வி. 851)” எனக் குறிப்பர்.
பாடலின் நேரிய பொருள்
பாடல் கூறும் நேரிய பொருளை அறிதற்கு இப்பாடலைத் தொடரியல் நிலையில்; நோக்கும் போது இப்பாடல் “சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே” என்று எழுவாய் பயனிலை எனும் இரு பகுதிகளின் இணைவாக உள்ளதை உணரமுடிகிறது. இதன் பொருள் (முருகனுக்குரிய) இக்குன்றம் (குலைகளாக உள்ள) காந்தட் ப+க்களையுடையது என்று அமைகின்றது. மாற்றிலக்கண முறையில் சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே என்பதனுள் சேஎய் என்பதையும் குலை என்பதனையும் நீக்கினாலும் இதன் பொருளில் மாற்றம் பெரிதுமின்றி “குன்றம் காந்தட் ப+க்களையுடையது” என்று அமைகின்றது. எனவே பாடலின் முதன்மைப் பொருள் “குன்றம் காந்தட்டே” என்பதாகிறது. இந்த எழுவாய்; பயனிலைப் பகுதிகள் அடைகளைப் பெற்று விரிகின்றன.

விரிவை உளப்படுத்தி நோக்க பெறப்பட்ட முதன்மைப் பொருளிலும் விரிவு ஏற்படுகிறது. எழுவாய்ப் பகுதிக்கானது: காந்தள் மலர்ந்துள்ள குன்றம் முருகனுக்குரியது, அம்முருகன் போர்க்களம் இரத்தத்தால் சிவப்பாகும் படி அசுரர்களைக் கொன்றவன், சிவந்த திரண்ட அம்பை உடையவன், இரத்தத்தால் சிவந்த கொம்மையுடைய யானையை உடையவன், உழல இடப்பட்ட வீர வளையத்தை அணிந்தவன் பயனிலைப் பகுதிக்கானது: குலைகளாக உள்ள காந்தள், சிவந்த நிறத்தை உடைய செங்காந்தள்
இவ்விரிவின் அடிப்படையில் குன்றம் முருகனுக்குரியதாகவும் தெய்வத்தன்மை பொருந்திய இடமாகவும் அமைகிறது. அக்குன்றத்துக் காந்தளும் கடவுளுக்குரியதாகிறது. அக்காந்தளும் வெண்காந்தளாக இல்லாமல் செங்காந்தளாகிறது. காந்தட்ப+ குன்றத்துள் ப+த்துள்ளதென்பதால் ப+க்களின் மிகுதியும் உணரப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் பொருள்களுக்கேற்ப துறைப்; பொருள் விளக்கமும் கூறப்படுகிறது. தோழி கையுறை மறுத்த கூற்றிற்கேற்ப விளக்குவோர் தரும் கூடுதல் விளக்கங்களாவன,
1 கடவுள் காந்தள் ஆதலின் தெய்வம் சூடுவது எனக் கூறி தோழி தலைவன் தந்த கையுறையை ஏற்கவில்லை.
2 கடவுட்கு உரிய குருதி நிறமுடைய இக்காந்தள் ப+வினை நினக்குத் தந்தவர் யார் எனத் தாயர் முதலியோர் ஐயற்று வினவுவர் எனத் தோழி மறுத்தாள்.
3 வேலனும் வெறியாடும் காலத்தன்றிப் பறியாத ப+வினைப் பறித்து நினக்குத் தந்தவர் யார் என வினவப்படும் எனக் காட்டி மறுத்தாள்.
4 இம்மலைப் பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ள இம்மலரினை ஒருவரும் சூடாத போது இவள் சூடினால், சூடியது ப+ப்பற்றியன்று சிறந்தான் ஒருவன் தந்தமையால் என அயலாரால் உய்த்துணரப்படும் எனக்காட்டி மறுத்தாள்.
5 குன்றத்துக் காந்தள் செந்நிறம் உடையது எனக் கூறி நீ கையுறையாகத் தந்த இப் ப+ நின் உடல் வெப்பத்;தால் கரிந்து காட்டுகின்றது என்றும் இதனைத் தலைவி காணின் ஆற்றாமையால் வருந்துவாள் என்றும் மறுத்தாள்.
6 தலைவ! நீ தந்த இச் செங்காந்தண்மலர் எங்கட்கு அரும் பொருள் அன்று எமது மலையின்கண் இது நிரம்ப வுளது காண்! ஆகலின் இவ்வொண்பொருள் எமக்கு வேண்டா எனத் தோழி கையுறை மறுத்துக் கூறுகின்றாள்
இவ்விளக்கங்கள் பாடலின் விரிவுப் பகுதிகளின் வழி பெறப்படும் செய்திகளையும் உள்ளடக்கியதாக அமைவது விளங்கும். தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் துறையில் விளக்குவோர், தரும் கூடுதல் விளக்கங்களாவன,
1 நான் செங்காந்தட் ப+க் கொய்து வருவேன் அச் செங்காந்தள் மலர்ந்துள்ள இடத்துள் தெய்வம் உள்ளது. எனவே நீ அவ்விடம் வருதல் கூடாது நான் ப+ப் பறித்து வரும் வரை நீ இவ்விடத்திலே இரு எனத் தோழி கூறியதாகக் கூறுவர்.
சேஎய் - சேயன்னாய்
இதனுள் விளிச்சொல் வெளிப்படையாக இல்லாமல் இருப்பதால் முதல் துறையில் கேட்போராகத் தலைவன் கூறப்;பெறுகிறான் இரண்டாவது துறையில் தலைவி குறிக்கப் பெறுகிறாள். “‘வெற்ப’ எனும் விளி முன்னத்தால் வருவிக்கப்பட்டது” என்பர்.உ.வே.சாமிநாதய்யர். விளிச்சொல்
இல்லாத போதும், ‘சேஎய்’ என்பதைச் சேயன்னாய் எனும் விளியாகக் கொள்வோரும் உண்டு. இதனை, “சேயன்னாய் என்னாது ‘சேஎய்’ என விளித்தால் வள்ளியைக் கள்ளத்திற் கலக்க உள்ளங் கொண்ட முருகனது முயற்சி போன்றதே நினது இம் முயற்சியுமென உய்த்துணருமாறு ஓர் பொருளையும் தந்து நிற்றலுணர்ததியது. அளபெடை விளியின் கண் வந்தது” எனும் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் உரைவரிகள்
உணர்த்தும். சேஎய் என்பதை சேயன்னாய் எனும் விளிச்சொல்லாகக் கொண்ட போதும் இப்பாடலின் பொருள், “ ….முருகனை நிகர்த்தாய் (இவ்வெங்கள்) குன்றம் குருதியைப் போன்று ப+க்கும் ப+வின் குலைகளைக் கொண்ட (செங்) காந்தளையுடையது. (ஆதலின் எங்கட் கெளிய இதனை ஏலேம்)” என்று கையுறை மறுத்த கூற்றிற்கு ஏற்பவே கூறப்படுகிறது.
பாடல் முதன்மையும் பொருளும்
கையுறை மறுத்த கூற்றில் எழுவாய்ப்பகுதி தோழி தலைவனுக்கு தனது நாட்டில் உள்ள மலை பற்றியும் அம்மலையில் உள்ள கடவுளின் போர் வெற்றி பற்றியும் எடுத்துக் கூறுவதாக அமைகிறது. புயனிலைப்பகுதி கையுறை வேண்டாம் என மறுத்துக் கூறுதற்குரிய காரணத்தை உடையதாகிறது.
சேஎய் என்பதை சேய்யன்னாய் எனும் விளியாகக் கொண்டபோதும் தலைவனை விளித்து எங்கள் குன்றம் எனும் எழுவாய் அமைந்து பயனிலைப் பகுதி கையுறை மறுத்தற்குரிய காரணத்தையுடையதாகவே அமைகிறது.
தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் கூற்றில் விளக்கும் போது எழுவாய்ப்பகுதி தலைவிக்குத் தோழி தங்களது நாட்டில் உள்ள மiலைபற்றியும் அம்மலையில் உள்ள கடவுள் பற்றியும் விளக்கிக் கூறி அவ்விடம் நீ வருதற்குரியதன்று என தலைவியை அவ்விடத்தே விட்டுச் செல்வதற்குரிய காரணத்தையுடையதாகிறது. பயனிலைப் பகுதி தோழி செல்வதற்கான நோக்கமாகக் (ப+ப் பறித்து வருதல்) கூறப்படுகிறது. இதனால் முதல் துறை பயனிலைப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்கப்பட இரண்டாவது துறை எழுவாய்ப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்குகிறது என்பதை உணரமுடியும்.
வாக்கிய அமைப்பில் எழுவாய்ப் பகுதியை விட பயனிலைப் பகுதியே அவ்வாக்கியத்தின் பொருள் பொதிந்துள்ள பகுதியாகும். அதன் அடிப்படையில் முரகனது குன்றம் காந்தளையுடையது. எனும் வாக்கியத்தில் முருகன் குன்றம் என்பதைவிட காந்தளையுடையது என்பதே பொருட்சிறப்புடைய பகுதியாகும்.. இவ்வாக்கியமே காந்தளையுடைய குன்றம் முருகனது. என்றிருப்பின் அப்போது காந்தளையுடைய குன்றம் எனும் பகுதிகளைவிட முருகனது என்பதே பொருட்சிறப்புடையதாகிறது. இப்பாடல் தொடரியல் நிலையில்p நோக்க “சேஎய் குன்றம் குலைக் காந்தட்டே” என்றே அமைந்துள்ளது. இப்பாடற்பகுதியில் பொருட் சிறப்புடைய பகுதியாக "காந்தளையுடையது". என்பதே அமைகிறது. தோழி காந்தளையுடையது எனக் கூறி தலைவியை இடத்துய்த்து நீங்கினாள் என்பதைவிட தலைவன் கொண்டுவந்த கையுறையை மறுத்துக்கூறினாள் என்று கூறுதற்கே சிறப்புடையதாகிறது.
தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது எனும் துறையில் விளக்குமிடத்து கூறப்படும் விளக்கங்களில் பல ஐயத்திற்குரியனவாகின்றன. அவையாவன.
• இப்பாடற்குக் கூறப்பெறும் இரண்டு துறைகளுமே குறிஞ்சித் திணைக்குரிய பாடுபொருளாகவே அமைகின்றன. இடம் பெற்றுள்ள கருப்பொருட்களும் குறிஞ்சித் திணைக்குரியனவாகவே அமைந்துள்ளன. எனவே இதனுள் விளிக்கப்படுவது தலைவியாயின் அவளும் குறிஞ்சி நிலப்பெண்ணாவாள் என்பது வெளிப்படை. அவ்வாறு இருக்க குறிஞ்சி நிலத்தலைவிக்கு குறிஞ்சி நிலத்து மலையைப் பற்றியும் அதில் உறையும் தெய்வம் பற்றியும் நான்கு அடிப்பாடலில் மூன்று அடிகளில் குறிப்பிட்டு அதன் காரணமாக நீ அவ்விடம் வருதற்குரியதன்று எனவே நீ இங்கே இருப்பாய் எனத் தோழி கூறினாள் என்பது ஐயத்திற்குள்ளாகிறது.

• குறிஞ்சித் தெய்வமுடைய ஒரு இடத்திற்கு குறிஞ்சி நிலத்து தலைவி செல்லுதல் கூடாதெனில் அவ்விடத்திற்கு தலைவியின் ஒத்த வயதுடைய தோழி மட்டும் செல்ல முடியுமோ எனும் ஐயமும் தோன்றுகிறது.
முடிவுரை
குறுந்தொகை முதற்பாடல் தோழி கையுறை மறுத்தது என்றும் தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது என்றும் இரு வேறுபட்ட துறைவிளக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றுள் எத்துறை மிகுதியும் பொருட்சிறப்புடையது என்பதை ஆராயும்பொருட்டு தொடரியல் முறையில் நோக்க இப்பாடல் எழுவாய் பயனிலை எனும் இருபகுதிகளின் இணைவாக இருப்பது புலப்படுகிறது. இவ்விரு பகுதிகளுள் முதல் துறை பயனிலைப்பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்கப்பட இரண்டாவது துறை எழுவாய்ப் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளக்குகிறது.
ஒரு வாக்கியத்தின் பொருள் பெரும்பான்மையாக பயனிலைப் பகுதியிலே புதைதல் தமிழ் வாக்கிய அமைப்பு. தோழி தலைவியை இடத்துய்த்து நீய்கியது எனும் துறைவிளக்கப்பகுதிகளில் பல ஐயத்திற்குரியனவாக உள்ளன. எனவே குறுந்தொகை முதற்பாடலுக்கான இரு துறைகளுள் தோழி கையுறை மறுத்தது எனும் துறையே மிகுதியும் பொருத்தமுடையது என்பது தெளிவாகிறது.