நீரின் றமையா துலகு
பொய்யா மொழிப்புலவன் இயற்றிய வள்ளுவத்துள் இவ்வுலக உருண்டையின் எதிர்காலம் தீர்க்க தரிசனமாய் சுட்டப்பட்டுள்ளது. “நீரின் றமையா துலகு” என்பது வள்ளுவன் கூறிய தீர்க்க தரிசனச் சொற்களுள் குறிப்பிடத்தக்கதாகும். நீரின் பெருமையினையும் அதன் தேவையினையும் வள்ளுவத்துள் ஆங்காங்கே காணமுடிகிறது. அக்கருத்துகளுக்கெல்லாம் முன்னுரையாகவே வான்சிறப்பு எனும் அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகப் போக்குகளைக் காணும் போது வள்ளுவருரைத்த வான்சிறப்பின் பொருண்மைகளை இவ்வுலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்பொருட்டு அமையும் இக்கட்டுரை வான்சிறப்பில் அறியப்படும் வள்ளுவர் காலத்தைய சமுதாயப் போக்குகளையும் அச்சமுதாயத்திற்கு வள்ளுவருரைத்த கருத்துக்களையும் எடுத்துரைப்பதுடன் தற்காலத்தைய உலகப் போக்குகளையும் அதற்கு வேண்டிய கருத்துகளையும் வரையறுத்துரைக்கும் விதமாக அமைகிறது.
வான்சிறப்பு:
133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளுக்குப் பாயிரமாக அமைவது கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் எனும் நான்கு அதிகாரங்கள். இவ்வதிகாரங்கள் வள்ளுவத்தின் அனைத்துக் கருத்துக்களுக்குமான முன்னுரையாக அமைந்துள்ளன. நாடு, இனம், மதம் கடந்த ஒரு கடவுள் வாழ்த்தை தமிழ் மொழியில் படைத்திருக்கும் வள்ளுவர், கடவுள்வாழ்த்தைத் தொடர்ந்து முன்வைக்கும் கருத்துகளுள் முதலாவதாக வான்சிறப்பு அமைகிறது. இதனை அடுத்தே நீத்தார் பெருமையும், அறன் வலியுறுத்தலும் அமைகின்றன. நீரின்றி உயிர்கள் வாழ்தல் இயலாது என்பதால் அந்த நீத்தாருக்கும் அந்த நீத்தாராலும் பிறராலும் செயல்படுத்தப்படும் அறனுக்கும் நீரே ஆதாரமாக அமைகிறது. எனவே வான்சிறப்பை நீத்தார் பெருமைக்கும் அறன் வலியுறுத்தலுக்கும் முன்னதாக உரைத்தார்.
சமூகப் பின்புலமும் வான்சிறப்பும்
இவ்வுலகம் என்பது வானத்தின் கொடை. வானத்தின் கொடையான மழை இல்லை என்றால் இவ்வுலகமே இல்லாது அழியும் என்னும் எச்சரிக்கை மொழியை “வானின் றுலகம் வழங்கி வருதலாற்”(குறள்.11) என்றார். எனவே மழையானது அமிழ்தம் போன்றது என்றுரைக்கின்றார்.
வான்சிறப்பில் வான்தரும் மழையினாலே இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது. எனவே அதனை உணர வேண்டும் என்பதை வள்ளுவர், “தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று” (குறள்.11) என்றுரைக்கிறார். இதன்வழி மழையின் சிறப்பை உணராதிருந்த சமுதாயம் அறியப்படுகிறது.
மழை என்பது நீர் எனும் ஒரு தன்மையில் மட்டும் நமக்குப் பயன்படுவதில்லை. அதுவே இவ்வுலகத்துக்கு வேண்டிய எல்லா உணவுகளையும் உற்பத்தி செய்வதற்கு அடிப்படையாகவும் அமைகிறது. இதனை “துப்பாய துப்பாக்கி….. துப்பாய தூஉம் மழை” (குறள்.12) என்று குறிப்பிடுகிறார். எல்லா உணவுப் பொருட்களின் உற்பத்திக்கும் மழையே அடிப்படை என்பதால்தான் மழை இல்லையென்றால் “உள்நின்று உடற்றும் பசி” (குறள்.13) என்றுரைக்கிறார் வள்ளுவர். மழையில்லை என்றால் உழவரின் உழவுத் தொழிலானது நடைபெறாது போகும் என்பதை, “ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்” (குறள்.14)
எண்ணற்ற தொழில்கள் இருந்தாலும் எல்லாத் தொழில்களுக்கும் உழவே அடிப்படை என்பதை வள்ளுவர், “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை”(குறள்.1031) என்றார். இதனால், உழவின் சிறப்பும் உழவிற்கான மழையின் சிறப்பும் பெறப்படும்.
மழையின் சிறப்பை எடுத்துரைக்கும் வள்ளுவரின் காதுகளுக்கு சமுதாயத்தினரின் கேள்விகள் ஒலித்திருப்பதை உணர முடிகிறது. அக்கேள்வியானது, வானம் வழங்கும் கொடையான மழையைப் பெறுதற்கு நாம் என்ன செய்யமுடியும்? என்பதே.
இக்கேள்விக்கான பதிலாக வள்ளுவர் “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை” (குறள்.5) என்றுரைக்கிறார்.
மழை பொய்த்துப் போவதற்கு இவ்வுலகத்து இயற்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணம் என்று எடுத்துரைக்கப்படுகிறது. இயற்கையின் பேரழிவுகள் மழை வளத்தைக் குறைத்துள்ளன. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் வளர்க்க வேண்டும். ஆனால் வள்ளுவர் கெடுப்பதும் எடுப்பதும் எல்லாம் மழையே என்றுரைக்கிறார்.
என்னதான் நாம் மரங்களை வளர்த்தாலும் மழையைப் பெறுதல் நம் முயற்சிக்கு எட்டாதது. அதே நேரத்தில் வள்ளுவர் காலத்தில் இயற்கை சிதைக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும்.
மழையில்லாது போனால் உழவுத் தொழில் நடைபெறாது. மழைபெய்யாவிட்டால் மருதநிலம் வறட்சியடையும். ஆனால், குறிஞ்சியும் முல்லையும் தங்கள் வளங்களை வழங்கி வாழ்வு தரும் என்ற எண்ணம் வள்ளுவர் காலச் சமுதாயத்தில் நிலவி இருக்க வேண்டும். அச்சிந்தனையாளர்களுக்கு வள்ளுவர், “விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது”(குறள்.16) என்கிறார்.
மழையில்லாத நிலையில் குறிஞ்சியும் முல்லையும் வளம் சிறந்தமையலாம். ஆனால், அது அரிது என்பதையே இங்கு வள்ளுவர் “காண் பரிது” என்றுரைக்கிறார்.
குறிஞ்சியும் முல்லையும் தன் வளம் குன்றலாம.; ஆனால் எப்படியும் நெய்தல் நிலைத்திருக்கும் மழைபெய்யாது பொய்த்தாலும் மக்கள் நெய்தலின் வளம் பெற்று வாழமுடியும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் வள்ளுவர் பதில் உரைக்கிறார். “நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந்”(குறள்.17) கடல் தரும் வளத்திற்கு கடல்நீர் மட்டும் போதுமானதாகிவிடாது. நன்னீர் வேண்டும். இதனையே, “கடல்நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ” என்று பாடினார் வாலி. நெடுங்கடல் தன்னுடைய நீரில் குறையும் என்றுரைக்காது தன்னுடைய நீர்மையில் குன்றும் என்றே வள்ளுவர் உரைத்துள்ளார். இதனாலும் நெய்தல் வாழ்வும் மழையின்றிச் சிறந்தமையாது என்பதை உணரமுடிகிறது.
இயற்கை சார்ந்து கேள்விகள் கேட்பார் ஒருபுறமிருக்க எல்லாம் அவனாலே என்றுரைக்கும் ஆன்மிகச்சொற்களும் வள்ளுவரின் காதுகளுக்கு எட்டியுள்ளது. “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு” (குறள். 18) என்று குறிப்பிடுகிறார்.
ஆன்மிகத்தை அடுத்து தானம் செய்வதாலும் தவம் செய்வதாலும் இவ்வுலகியல் வாழ்வை நிலைபெறச் செய்யமுடியும் என்றுரைப்பார் உரைகளுக்கும் வள்ளுவர் பதில் உரைக்கிறார். “தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்” (குறள்19) என்றுரைக்கிறார்.
வான்சிறப்பின் இறுதிக் குறளில், இச்சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும் ஒழுக்கம் என்பது நீரின்றி அமையாது என்கிறார். இதனை
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளான்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.” மூதுரை.
எனும் ஒளவையின் மூதுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். “விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி” என்றும் “நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு” என்றும் “தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்” என்றும் வள்ளுவர் கூறிய கருத்துக்களின் வளர்ச்சியாக ஒளவையின் இவ்வாக்கு அமைந்திருப்பதைக் காணலாம்.
இவற்றால் உலகத்து உயிர்களின் வாழ்விற்கு மழை மிக முக்கியம் என்பதும், மழை இல்லாதவழி இவ்வுலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. வானவர்க்;குச் செய்யும் பூசைகளினாலோ அல்லது தானம் தவம் செய்வதினாலோ உலகத்து உயிர்களை வாழச்செய்துவிட முடியாது. இவ்வுலகம் நிலைபெற்றிருக்க வேண்டும் என்றால் அதற்கு மழை வேண்டும். மழை இல்லையேல் உலக வாழ்வு அமையாது, என்றுரைக்கும் வள்ளுவக் கருத்துக்களை வான்சிறப்பு உணர்த்துகிறது.
இன்றைய சமூகமும் வான்சிறப்பும்
இன்றோ மழை நம்மை எட்டாமல் எங்கோ சென்று தேய்ந்தொழியும் பொருட்டு அனைத்துவித இயற்கை மாற்றங்களும் நிகழந்து வருகின்றன. கல்வி சார்ந்த இந்த சமூகத்தில் கல்வியால் எல்லாம் முடியும் என்று கல்விக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. விவசாயம் வீழ்ந்து வருகிறது. விவசாயம் செய்ய முயடிhத சூழல் உருவாகியுள்ளது. பசும் புல் தலைகாண்பது இன்று அரிதாகவே உள்ளது. பணத்தைச் சேர்க்க முயற்சிக்கும் மனிதன் அதற்காக இந்தப் பூமியை என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளான். நீர் நிலைகள் வற்றிவிட்டன. நீர் நிலைகள் இருந்த இடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஆறு குளங்களில் உள்ள நீரை இன்று யாரும் கைகளில் அள்ளிக் குடிக்க முடியாது. நீர் மாசடைந்துவிட்டது. பணத்திற்காக மட்டுமே மனிதன் இந்தப் பூமியைப் பாழ்படுத்திவிட்டான். இனிமேல் அமில மழைகள் பெய்வதற்கு வாய்ப்புகள் உண்டே தவிர அமிழ்தமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும் நீர்நிலைகளில் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, பெய்யும் மழைநீரும் பயனற்று வீணாகி வருகிறது. எங்கோ ஓரிடத்தில் பெய்யும் அதிக மழை வீணடிக்கப்படுகிறது. மழை நீரைச் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை.
முடிவுரை
வள்ளுவர் கூறிய வான்சிறப்பு இன்றளவும் உணரப்படாமலே இருக்கிறது. நீரின்றி இவ்வுலகம் அமையாது என்பதை யாவரும் அறியாதிருக்கின்றனர். மழைநீர் சேமிப்பிற்கான விழிப்புணர்வு இல்லை. பணத்தை ஈட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் உலகத்து இயற்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சி பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. சமூகத்திற்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோரில் பலர் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துச் செயலாற்றுகின்றனர். மக்கள் வாழ்விற்கான எதிர்காலச் சிந்தனை தேய்ந்தொழிந்து வருகிறது. பண்டைய காலத்து வரலாற்றை மறந்தும், எதிர்காலத்து நிலையை மறந்தும், நிகழ்காலத்தில் வாழ்ந்தாலே போதும் என்று வாழ்கின்ற நிலை உள்ளது. இந்நிலை விரைவில் மாறவேண்டும் மாற்றப்பட வேண்டும். நீர் ஆதாரங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும்.
மரமென்னும் மண்ணுயிர் கோறல் நலமென்னும்
குணமெலாம் கெட்டழிந்தார் செயல்
இயற்கை அழிந்திடவே இன்பமெல்லாம் மறைந்து
செயற்கையில் செய்வதொன் றில
வாழும் வகையறிந்து மழைதந்த தகையறிந்து
நாளும் நலனோங்கல் நலம்