Thursday, November 20, 2008

தமிழின் பெருமைகள்

தமிழை ஆராயும் ஆய்வாளர்களே தமிழின் பெருமை உணர்ந்து செயல்படுங்கள் . உங்களின் கவனத்திற்குச் சில சொற்கள்
" திருவள்ளுவர் காலம் முதல் நம் காலத்தில் பாரதியார் ,மறைமலையடிகள், திரு. வி . க . வரை பல தமிழ்ப் பேர் அறிஞர்கள் பேசியும் எழுதியும் வளர்த்துப் பண்படுத்திய பெருமொழி நம் தமிழ் மொழி . எயத்தனையோ இடை யுருகளுக்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மொழியும் பண்பாடும் இடையறாமல் வந்திருப்பது நம் தமிழின் ஒரு தனிச்சிறப்பு . அரசுகள் மாறின அமைசுகள் மாறின ஆனால் தமிழ்மொழியும் பண்பாடும் மாறாமல் வந்துள்ளன . அவ்வாறு இடையறாமல் வளர்ந்து வந்திருக்கும் இவ்விரு செல்வங்களையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு இளைங்கர்களுக்குண்டு "
அறுபது இரண்டாம் வருடம் செப்டெம்பெர் மாதம் எழாம் நாள் சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னை கலை மன்ற பொதுக்கூட்டத்தில் மு . வரதராசனார் பேசியது .

“ நான் யாரென்று கேட்டால் கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ்க் காதலன். தமிழைப் பெருங்கடல் என்று தமிழை அடக்கத்துடன் ஆராய்ந்து தட்டுத்தடுமாறித் தமிழ் பேசுகிற சிற்று}ழியன் நான். நான் தமிழை என் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறேன்”

7 – 9 – 1962 இல் சென்னை மாநிலக் கல்லூ¡யி¢ல் தமிழ்க் கலை மன்ற விழாவில் டாக்டர் கமில் சுவலபில் பேசியது

Saturday, November 8, 2008

மரமக்கள் ஆதலே வேறு

மரமக்கள் ஆதலே வேறு

இவ்வடி, தமிழ் மறை எனப் போற்றப் பெறும் திருக்குறளில் ஊக்ககம் உடைமை! என்னும் அதிகாரத்தில் இடம்பெறுகிறது. ஊக்கம் உள்ள மனிதனின் சிறப்பையும் ஊக்கம் இல்லாதவனின் தன்மையினையும் எடுத்துரைக்கும் குறளின் இரண்டாவது அடியாக அமைகின்றது. இது, ஊக்கம் இல்லாதவனுக்குக் கூறப்பெறும் உவமை பொருந்திய அடியாக உள்ளது. இதனுள் கூறப்பெறும் உவமை அறிஞரின் சிந்தனைக்கு விருந்தாகியுள்ளது. எனினும், இவ்வடி வேறொரு கோணத்தில் சிந்திக்கப்பெற்றுள்ளது. அவற்றை எடுத்துரைத்து இவ்வுவமையின் சிறப்பை விளக்குதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஊக்கமில்லாதவனும் மரமும்'

உரம் ஒருவற்கு உள்ளவெறுக்கை அஃதில்லார்

மரமக்கள் ஆதலே வேறு' (திருக். 600)

என்னும் இக்குறளினை , ' ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே: (வடிவால் ) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு' என்று விளக்குவர் மு. வரதராசனார். ' Firmness of soul in man is real excellence others are trees, Their human form a mere pretence'என்று விளக்குவர் ஜி .யூ. போப். இவற்றால், உரைப்பகுதிகள், ஊக்கமில்லாதார் மரங்களே என விளக்குவதை உணரமுடியும். இவ்வொப்புமை சரியானதா? எனும் கேள்வியினை அறிஞர் பெருமக்கள் எழுப்பியுள்ளனர்;.
அறிஞர் பார்வை

மரங்கள் நாள்தோறும் வளரும் இயல்பின: ஒரு கிளை வெட்டப்பட்ட போதும் அவ்விடத்தில் ஒன்றுக்குப் பலவாக வளரும் தன்மையின: சில மரங்கள் துண்டிக்கப் பட்ட மரக்கட்டையான போதும் வேர்விட்டு வளரத் துடிக்கும் ஊக்கம் உடையன: ஒவ்வொரு பொழுதும் முயற்சியுடையன. அவ்வாறிருக்க, ஊக்கம் இல்லாத மனிதனுக்கு மரம் எவ்வாறு ஒப்புமையாகும். இதனை, ' வாழ வேண்டும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற வைராக்கியமும் ஆவேசமும் மரம் நடத்தும் மகத்தான பாடம் இந்த உயர்ந்த மரங்களை ஊக்கம் இல்லாத மனிதனோடு வள்ளுவர் ஒப்புமை விட்டாரே வள்ளுவரை மறுக்கலாமா? ஏன் மறுக்கக் கூடாது' என்று எடுத்துரைப்பர் சுகி. சிவம் ( சுகி. சிவம் . வெற்றி நிச்சயம் ப. 79) இந்தச் சிந்தனை உரையாசிரியர்களிடமும் காணப்பட்டுள்ளதை உரைப் பகுதிகள் உணர்த்துகின்றன. இக் குறளுக்கு உரைவிளக்கம் செய்த பரிமேலழகர், ' மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மை பற்றி மரம் என்றும் மரத்திற்குள்ள பயன்பாடின்மை பற்றி மக்களாதலே வேறு என்றும் கூறினார். பயன் - பழம் முதலியவும் தேவர் கோட்டம் இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன' என்று விளக்குவர். 'உயர்விற்கும் நன்மைக்கும் ஏதுவான வினைமுயற்சியின்மையின் அதை இயங்காமையாகக் கொண்டு மரம் என்றார் உள்ளத்தால் இயங்காது காலால் மட்டும் இயங்குவது மக்களியக்க மன்றென்பது கருத்து. மரங்கள் இயங்கா விடினும் அவற்றுள் ஒரு சாரன வேர் முதல் விதை வரை இருதிணையுயிரிகட்கும் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவன விரு வகையிலும் பயன்படாதளவும் காய்ந்தால் விறகாகவேனும் உதவாமற் போகா இப்பயன்பாடு ஊக்கமில்லா மாந்தர்க்கின்மை மக்களாதலே வேறு என்று குறித்த வடிவு வேறுபாட்டாற் குறிப்பாகப் பெறப்பட்டதாம்' என்று உரைப்பர் தேவநேயப் பாவாணர். இவ்வுரைப் பகுதிகள் இரு பகுதியாக அமைகின்றன. அவையாவன, 1 . ஊக்கம்மில்லாதார்க்கு மரம் ஒப்பாவதர்க்கான காரணங்களை எடுத்துரைப்பன ( நல்லறிவு இன்மை, காரிய முயற்சி இன்மை, உயர்வுக்கும் நன்மைக்கும் உரிய வினைமுயற்சியின்மை) 2. ஊக்கம் இல்லாதார்க்கு மரம் ஒப்பாகாது அமைவதற்கான காரணங்களைச் சுட்டுவன ( மரங்களின் பயன் . பழம் தருதல், தேவர் கோட்டம், இல்லம், தேர், நாவாய், முதலியவற்றிற்கு உறுப்பாதல் வேர்; முதல் விதை வரை உணவாகப் பயன்படுதல,; மருந்தாகப் பயன்படுதல் விறகாகப் பயன்படுதல்) இவற்றால் ஊக்கமில்லாதார்க்குப் பல்வேறு காரணங்களால் மரங்கள் ஒப்பாகாது என்ற சிந்தனை உரையாசிரியர்களிடம் காணப்பட்டுள்ளதையும் அதற்கு அவர்கள் சமரசம் செய்துள்ளதையும் விளங்கமுடியும்.ஊக்கமில்லாதார்க்கு மரம் ஒப்பாவதற்கான காரணங்கள் ஊக்கம் இல்லாதவருடன் மரங்கள் ஒப்புமை செய்யப் பெறுவதற்கு உரையாசிரியர் உரைக்கும் காரணங்கள் வள்ளுவர்க்கு உடன்பாடான காரணங்களாக இருக்க முடியாதென்பதைப் பிற குறட்பாக்களின் வழி அறியமுடிகின்றது.
உதவி செய்யும் பண்புக்கு இணையான ஒன்றை இந்த உலகில் மட்டுமல்ல தேவர் உலகிலும் பெறமுடியாது( திருக். 213) , என்று கூறும் வள்ளுவர் மனிதநேயமுடைய மனிதன் தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு மகிழ்ந்து வழங்கும் தன்மைக்கு ஊருக்கு நடுவே பயன் மரம் பழங்களால் நிரம்பியிருக்கும் இயல்பை உவமை கூறுகின்றார்( திருக். 216). கொடுத்து மகிழும் இன்பத்தை அறிந்தவனிடம் செல்வம் இருப்பது தளிர் முதல் வேர் வரை உள்ளதனைத்தும் மருந்தாக உதவும் மரத்துக்கு இணை என்கிறார். இவற்றால் மரங்களின் இயல்புகள் பல நற்காரியங்களுடன் கூறப்பெற்றிருப்பது விளங்குகிறது. ஒரு முள்மரத்தை சிறியதாக இருக்கும் போது வெட்டினால் தான் இல்லையென்றால் அது வைரம் பாய்ந்து வளர்ந்து பின்பு அது வெட்டுபவனின் கையைக் காயப்படுத்தும் எனும் செய்தி (திருக். 879) மரங்களின் முயற்சியைத் தெரிவிக்கின்றது. இவற்றால் ஊக்கமில்லாத ஒருவனுக்கு மரங்கள் நல்லறிவின்மை , காரியமுயற்சியின்மை, உயர்விற்குரிய வினைமுயற்சியின்மை எனும் காரணங்களால் ஒப்பாகும் எனக் கருதியிருக்க மாட்டார் என்பது விளங்கும்.
வள்ளுவர் கூறும் மர உவமைகள்
மக்கட் பண்பு இல்லாதவரையும் ( திருக். 997) , கண்ணோட்டம் இல்லாதவரையும் ( திருக். 576) , வள்ளுவர் மரத்துடன் ஒப்பிட்டுக் கூறுவதைக் காணமுடிகிறது. மக்கட் பண்பு என்பது, மனிதனாகப் பிறந்த ஒருவன் உயர்திணையாகக் கருதப்படுதற்குரிய தகுதியாகும் . அப் பண்பு இல்லாத ஒருவனை அஃறிணை என்று கூறுதல் தகும். இதன் அடிப்படையில் மக்கட் பண்பு இல்லாதவனுக்கு மரம் ஒப்பாகிறது. ஆனால் ஊக்கம் இல்லாதவனை மரத்துடனும் ஒப்பிட முடியாது. கண்ணோட்டம் இல்லாதவனுக்குக் கூறப்பெறும் மரம் மண்ணோடு இயைந்த சுதையாகக் கூறப்படுகிறதேயன்றி உயிருள்;ள பொருளாகக் கூறப்பெறவில்லை. மரமக்களாதலே வேறு எனக் கூறப்பெறும் இடத்தும் மரம் என்பதை உயிரற்ற பொருளாக நோக்குதல் சிறப்பாகும். யோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள; இங்கு கூறப்பெறும் மரம் என்பதை ஒரு உயிரற்ற பொருளாகவே கருதியுள்ளார் இதனை, ' Mental courage is true manhood Lacking that man is like a wood 'என்னும் உரை விளக்கும். மக்களாதலே வேறு என்பதை உரையாசிரியர்கள் ஊக்கமில்லாத மனிதனுடன் ஒப்பிட்டு பொருள் கண்டுள்ளனர். அவ்வாறு கொள்ளாது, மரமக்கள் ஆதலே வேறு எனக் கொண்டு மரங்களால் ஆன மக்களாதலே வேறு என விளக்குதல் சிறப்பாக அமையும். இவ்வாறு பொருள் கொள்வதன் வழி இங்கு கூறப்பெறும் மரம் உயிரற்ற பொருளாக அமையும், இவற்றுடன் ஊக்கம் இல்லாதார் உயிருள்ள மக்களாகவும் ஆகார் உயிருள்ள மரமாகவும் ஆகார் மரத்தால் ஆன மக்களாக இருப்பரேயன்றி மரமாகவும் பயன் தரார் மக்களாகவும் பயன் தரார் என்ற விளக்கமும் பெறப்படும்.


முடிவுரை

மரமக்களாதலே வேறு எனும் வள்ளுவ அடியை ஊக்கம் இல்லாதாருக்கு மரங்கள் ஒப்பாகும் எனும் கருத்தில் உரையாசிரியர்கள் விளக்குகின்றனர். எனினும் மரங்களுடன் ஊக்கம் இல்லாதாரின் இயல்புகள் ஊக்கம் உள்ள மரங்களுக்குப் பொருந்தாது அமைவதையும் உரையாசிரியர்கள் சுட்டுகின்றனர். மரங்கள் ஊக்கம் உடையன என்பதை பல குறட்பாக்களின் வழி உணரமுடிகின்றது இவற்றால் வள்ளுவர் ஊக்கம் இல்லாதவருக்கு மரத்தை ஒப்பாகக் கூறியிருக்க மாட்டார் என்பதையும் விளங்க முடிகிறது. எனவே இவ்வடிக்கு மரத்தால் ஆன மக்கள் எனப் பொருள் கொள்வது சிறப்பாகிறது.
உரையாசிரியர்களால் இக்குறள் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு பொருள் கொள்ளப் பெற்றுள்ளது.1 . உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை 2. அஃதில்லார் மரம் 3. மக்களாதலே வேறு. இவ்வாறு பொருள் கொள்ளாது இக்குறளை இரண்டாகப்பிரித்துப் பொருள் கொள்வது சிறப்பாகும் 1 உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை 2 அஃதில்லார் மரக்களாதலே வேறு. இதன் வழி ஒருவற்குத் திண்ணிய அறிவாவது உள்ள வெறுக்கை அஃதில்லார் மரத்தால் ஆன மக்களாக இருப்பரே அன்றி மக்களாகவும் பயன் தரார் மரமாகவும் பயன் தரார் என்ற பொருள் பெறப்படும் . ஊக்கம் உடைய மரங்களை வள்ளுவர் ஊக்கமில்லாதார்க்கு ஒப்புமை கூறிவிட்டாரோ என்ற ஐயம் நீக்கப்பெறும்