உலக வழக்கில் சில சொற்களும், சொல்லடைவுகளும், பழமொழிகளும், இலக்கிய அடிகளும் தனக்குரிய பொருளை இழந்துள்ளன, சிந்தனை வளர்ச்சியாலும் கால மாற்றத்தாலும் வேறொரு பொருள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றின் உண்மைப் பொருள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராயும் பகுதியாக இப்பக்கங்கள் அமைகின்றன.
“மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே”
எனும் பழமொழியை பெரியோர் வாய்க் கேட்டதுண்டு. இதற்கு இன்றைய நிலையில் இருவேறு பொருள்கள் காணப்படுகின்றன.
1. இவ்வரியை, “மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே” என்று பிரித்துப் பொருள் கூறுகின்றனர். திரை என்றால் அலை, எனவே மங்கு திரை என்பது சீற்றம் இல்லாத அலை, என்றாகிறது. இதனால் ‘அலைகள் சீற்றம் இன்றியுள்ளதை நம்பி ஆற்றில் இறங்குதல் கூடாது. எதிர்பாராத விதமாக ஆற்று நீர் பெருக்கெடுத்து வருதல் உண்டு’ எனப் பொருள் கூறப்படுகிறது.
2. ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’ எனப் பிரித்து, ‘மண்ணால் செய்யப் பெற்ற குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, மண்குதிரை ஆற்றைக் கடந்து செல்லும் தகுதியற்றது’ என்று பொருள் கூறுவதையும் காண முடிகின்றது. கருத்துக்களின் பொருத்தம்
முதல் கருத்;தில், ‘மங்கு திரை’ என்று பிரிக்கப்படுகின்றது. ஆற்றில் இறங்காதே என்பது அப்படியே ஏற்கப்படுகின்றது. இங்கு சிந்திக்க வேண்டுவது ‘திரை’ என்பதே. அலைகள் எங்கு தோன்றும்? நிலையாக இருக்கும் நீர் நிலைகளில்தான் அலைகள் தோன்றும். ஓடிக்கொண்டிருக்கும் நீர் பள்ளத்தை நோக்கிப் பயணப்படுமே அன்றி அலைகளைத் தோற்றுவிப்பதில்லை. ஆற்று நீர் பெருக்கெடுத்த போதும் அதன் பயண வேகம் அதிகரிக்குமே அன்றி அலைகள் அதிகரிப்பதில்லை. எனவே ஆற்றில் இறங்காதே என்ற பிற்பகுதியை நோக்க மங்கு திரை என்ற பொருள் பொருந்தவில்லை என்பது தெழிவு
இரண்டாவது கருத்து, மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றமைகின்றது. இதனுள் குதிரை ஆற்றைக் கடக்க உதவும் விலங்கு என்ற பொருள் உள்நிற்கின்றது. உலக வழக்கில், ஆற்றைக் கடந்து போவதற்கு விலங்குகளில், கழுதை, மாட்டு வண்டி முதலியன பயன்படுத்தப்படுகிறதே தவிர குதிரை பயன்படுத்தப்படுவதில்லை. ஆற்றைக் கடக்கும் வலிமை குதிரைகளுக்கு மிகக் குறைவு. மண் கழுதையினை நம்பி ஆற்றில் இறங்காதே மண்மாடுகளை நம்பி ஆற்றில் இறங்காதே என்றிருந்தால் ஏற்கலாம். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றிருப்பதை ஏற்க இயலாது.
கருத்துக்கள் உணர்த்தும்
நீதி இருவேறுபட்ட கருத்துக்களும் மக்களுக்கு ஒரு நீதியை உணர்த்தி நிற்கின்றன. அதாவது நிலையற்ற ஒன்றை நம்பி பெரிய செயலில் ஈடுபடுதல் கூடாது. மங்கு திரை ௲ அலைகளின் அளவு நிலையற்றது. பெரியதாக வருதற்கு வாய்ப்புடையது. மண் குதிரை ௲ மண்ணால் ஆன குதிரை நிலையற்றது. ஆற்று நீரில் அழிந்து விடும் தன்மையுடையது. இவற்றை நோக்க இப்பழமொழி உணர்த்தும் நீதி “நிலையானது போல் தோன்றும், நிலையற்ற ஒன்றை நம்பி பெரிய செயலில் ஈடுபடுதல் கூடாது” என்பதாக அமைகின்றது. இந்நீதியின் அடிப்படையில் இதன் பொருளை உணர்தல் வேண்டும். மெய்ப்பொருள்
‘ஆற்றில் இறங்காதே’ என்ற பகுதியில் கருத்து வேறுபாடுகள் காணப்படவில்லை. எனவே அப்பகுதியினை ஏற்பது சிறப்பு. ஆற்றுடன் தொடர்பு படும் அளவில் முதல் பகுதியைச் சிந்திக்க வேண்டியுள்ளது. ‘நிலையற்ற ஒன்று நிலையானது போல்’ தோன்றும் தன்மையில் அமைந்த ஆற்றுப் பகுதியுடன் தொடர்புடைய பொருள்களே முதல் பகுதிக்குரியனவாக அமைய வேண்டும். ஆற்றைக் கடக்காதே என்றில்லாமல் ஆற்றில் இறங்காதே என்றிருப்பதும் கவனத்திற்குரியது. ஆற்றில் இறங்கும் மனிதன் ஆற்றில் பள்ளமில்லாது மேடாக உள்ள இடத்தைத் தேர்ந்தெடுப்பதுடன் பிறகு அம்மேடு உறுதியாக உள்ளதா என்பதைச் சோதிப்பான். இம்முயற்சியில் அவன் தோற்றுப் போவதும் உண்டு. ஆம்! சில மேடுகள் மேலே பார்ப்பதற்கு உறுதியாகக் காணப்பட்ட போதும் அதன் உட்புறம் உறுதியற்ற களிமண் தன்மையாக இருக்கும். அதை நம்பி இறங்குவோர் புதையுண்டு போவதற்கு வாய்;ப்புண்டு. இவ்வாறு அமையும் மேடுகளைக் குதிர் என்று கூறுவதுண்டு. ‘குதிர்’ என்பது குவிந்து காணப்படும் எந்தப் பொருளுக்கும் வழங்கப்படுகிறது. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதைக் கேள்வியுறுவோம். அதன்படி ‘குதிரை அதாவது குவிந்து காணப்படும் மண்குவியலை நம்பி ஆற்றில் இறங்குதல் கூடாது’ என்பது பெறப்படுகிறது. இவற்றால் இப்பழமொழியானது “மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே” என்று அமைந்திருக்க வேண்டும் என்பது தெளிவு பெறுகின்றது.முற்காலத்தில் குதிர் + = குதிரை, என்று வழங்கப்பட்ட சொல்லைப் பிற்காலத்தில் குதிரை + ஐ = குதிரையை எனக் கொண்டுள்ளனர்.
1 comment:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே
விளக்கம் நன்கு அமைந்துள்ளது.
Post a Comment